Home ஆன்மிகம் புரட்டாசி சனிக்கிழமையில் இந்த மந்திரத்தைச் சொல்ல தவறாதீர்!!!

புரட்டாசி சனிக்கிழமையில் இந்த மந்திரத்தைச் சொல்ல தவறாதீர்!!!

518
0

புரட்டாசி சனியன்று ஓம் நமோ நாராயணாய நமக என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்தஅளவுக்கு மனம் பக்குவப்படும். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம். ஓம் காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவது உலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.

கடவுளை விட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு. திரவுபதியின் துன்பத்தைப் போக்கியது கோவிந்தா என்னும் நாமம். முதலையிடம் சிக்கிய கஜேந்திர யானையின் துன்பம் தீர்த்தது ஆதிமூலம் என்ற திருநாமம். கலியுகத்தில், இவ்வாறான நாமஜெபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடைய முடியும். கட்டித்தங்கம் போல கடவுள், ஆபரணத்தங்கம் போல அவரின் திருநாமம் என்று இதனைச் சொல்வதுண்டு. ஆபரணத் தங்கமான கடவுளின் திருநாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி, யாரும் எளிதாகச் சேமிக்கலாம். மிக விசேஷமாக ஸ்ரீ வைஷ்ணவத்தில் மட்டுமே இறைவனை பகவான் என்ற அடைமொழியில் அழைக்கிறோம்.

ஞானம்,சக்தி,பலம்,ஐஸ்வர்யம்,வீரியம்,தேஜஸ் ஆகிய ஆறு வகையான குணங்களை ஒன்றாக கொண்டவன் என்பதே பகவான் என்ற வார்த்தையின் உண்மை பொருளாகும் இத்தகைய பகவான் சத்யத்வம், ஞானத்வம், அநந்தத்வம், ஆனந்த்வம், அமலத்வம் என்ற உண்மை, அறிவு, எல்லை இல்லா நிலை, இன்பம், தூய்மை ஆகிய வடிவோடு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகவும் நம்பப்படுகிறது. இறைவனின் திருகுணங்களாக தென்கலை பிரிவினர் சொல்லும் செளலப்யம், செளசீல்யம், காருண்யம் ஆகியவைகளும் இங்கே சிந்திக்க தக்கதாகும்.

இவ்வளவு பெருமை வாய்ந்த திருமாலின் அருள் அமுதத்தை சாதாரண மனிதன் கூட நேருக்கு நேராக அனுபவிக்கும் ஒரு மார்க்கத்தை ஸ்ரீ வைஷ்ணவம் உலகுக்கு தந்துள்ளது. அந்த அமுதம் என்னவென்றால் ஓம் நமோ நாராயணாய என்று எட்டெழுத்து மந்திரமாகும். இந்த மந்திரத்தின் ஆழ்ந்த அகன்ற விரிவான பொருளை நம்மால் சிந்திக்க முடியாது என்றாலும் ஓரளவாவது சிந்திக்கும் தகுதியை நமக்கு நாராயணன் தந்துள்ளான்.  இதில் வரும் ஓம் என்ற பிரணவம் மூல மந்திரம் என்பது நாம் அறிவோம்.  வைஷ்ணவ சித்தாந்தபடி அ, உ, ம என்ற மூன்று எழுத்துகளின் சேர்க்கை ஒலியே ஓம் என்பதாகும். இதனுள் இருக்கிறன அகரம் இறைவனையும், மகரம் உயிரையும், உகரம் படைத்தலையும் சுட்டுவதாகும்.

உயிரானது இறைவன் ஒருவனுக்கே அடிமை என்பதை காட்டுவதே மந்திரத்தின் கடைசி பகுதியில் வரும் நம என்ற வார்த்தையாகும். நம என்ற வார்த்தையில் ந என்ற முதல் எழுத்தில் இல்லை என்ற பொருள் மறைந்திருக்கிறது. இந்த மந்திரத்தில் உள்ள நார,அயன,ஆய என்ற வார்த்தைகளுக்கு தனிதனி பொருள் உண்டு. நார என்பது நரனிடம் இருந்து தோன்றிய உயிர்களை குறிக்கும். அயன என்று சொல் உபாயம், பலன், ஆதாரம் என்ற பல பொருள்களை தருகிறது. இவை இரண்டும் சேர்ந்த நாராயண என்ற சொல் உயிர்களுக்கு ஆதாரம் என்ற பொருளை காட்டுகிறது. கடைசியாக உள்ள ஆய என்ற பதம் பணி என்ற பொருளை கொண்டது. அதாவது உயிர்கள் எப்போதும் இறைவனின் பணிக்காகவே உரியவைகள் என்பது இதன் அர்த்தமாகும். ஆக ஓம் நமோ நாராயணாய என்ற வார்த்தைகளால் மனிதனின் ஆணவம் அழிகிறது, ஆண்மை பிறக்கிறது, ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்படுகிறது.. இந்த எட்டெழுத்து மந்திரத்தை மூச்சு காற்றுடன் உள்ளுக்குள் இழுத்து தியானம் செய்தால் இறைவனாகிய திருமாலின் பரமபதம் கிடைக்கும் என்பது ஆழ்வாரின் அமுத மொழியாகும்.

வைஷ்ணவம் வெறுமனே வாழும் நெறியாக மட்டுமல்லாது இறைவனோடு பக்தனை கொண்டு சேர்க்கும் நெறியாகவும் இருக்கிறது என்று பல பெரியவர்கள் சத்திய வாக்காக சொல்வது இதனால் தான்.  எனவே நாமும் ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய என்று மீண்டும் மீண்டும் சொல்லி அடியவரின் துன்பங்களை களைந்து பாவங்களை போக்கி குழந்தை போல் அரவணைத்து கொள்ளும் திருமாலின் திவ்விய பாத கமலங்களை சிக்கென பிடித்து வணங்குவோம்.

Advertisement