Home அரசியல் பொங்கல் பரிசு 2,500 ரூபாயை நிறுத்தத் துடிக்கிறார் ஸ்டாலின்… முதல்வர் அதிரடி குற்றச்சாட்டு.

பொங்கல் பரிசு 2,500 ரூபாயை நிறுத்தத் துடிக்கிறார் ஸ்டாலின்… முதல்வர் அதிரடி குற்றச்சாட்டு.

357
0

ஓய்வு என்பதே இல்லாமல் ஆட்சியிலும் கட்சியிலும் பரபரப்பாக இயங்கிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. இன்று மூன்றாவது கட்டமாக நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது பொங்கல் பரிசு பணத்தை நிறுத்த ஸ்டாலின் தடை போடுவதாக எச்சரிக்கை செய்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையை அறிந்து, வருகின்ற தமிழர் திருநாளாம், தைத்திருநாளில் பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடிட அம்மா அவர்களின் அரசு, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக தலா ரூ.2500 வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்து உங்களை சந்திக்கின்றேன். 

இன்றைக்கு எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் இதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக, இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்தவர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கி வருகிறார்கள் என்ற பொய்யான செய்தியை பரப்பி வருகிறார். ஏன் என்று சொன்னால், இந்த திட்டம் மக்களிடத்திலே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருகிறது.

இந்த திட்டம் நிறைவேறி விட்டால், அண்ணா தி.மு.க. அரசுக்கு நல்ல பெயர் வந்து விடும் என்ற எண்ணத்திலே, இந்த திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும். 

அதற்கு சூழ்ச்சி செய்து நேற்றைய தினமே பொய்யான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்த வரைக்கும் கடந்த ஆண்டு குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. அப்போது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் சென்ற கட்சிதான் தி.மு.க. என்பதை இந்த நேரத்திலே நினைவுகூற கடமைப்பட்டிருக்கிறேன்.

மக்களுக்கு நல்லது செய்யும் எதுவும் தி.மு.கவிற்கு பிடிக்காது. ஆகவே, இன்றைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அந்த மக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதற்காக குடும்ப அட்டைக்கு ரூ.2500 வழங்கப்படும் என்ற அறிவிப்பை அறிவித்து, வருகின்ற 4ஆம் தேதி முதல் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 மற்றும் பொங்கல் தொகுப்பும் வழங்கப்படும். 

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் ஏழை, எளிய மக்கள் மகிழச்சியாக வாழவேண்டும், அனைத்து வளங்களும் பெற்று வாழவேண்டும் என்று எண்ணினார்கள். அந்த எண்ணத்தை நிறைவேற்றுகின்ற அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு, அண்ணா தி.மு.க. கட்சி. ஆகவே, பொதுமக்கள் எப்போதுமே அரசுக்கு துணை நிற்க வேண்டும். இந்த அரசு தான் எழை, எளிய மக்களை காக்கக் கூடிய அரசு என்று தெரிவித்துள்ளார்.

Advertisement