Home ஆன்மிகம் பிரசித்தி பெற்ற 12 ஆழ்வார்களும் அவர்கள் பாடிய பிரபந்தங்களும்

பிரசித்தி பெற்ற 12 ஆழ்வார்களும் அவர்கள் பாடிய பிரபந்தங்களும்

571
0

வேத அர்த்தங்களைப் புரிந்துகொள்ள இயலாமல் இருந்தோருக்கும், வேதங்களைக் கற்க அனுமதிக்கப்படாத குலங்களில் பிறந்தோருக்கும், பெண்களுக்கும் எளியோருக்கும் வேத அர்த்தங்களை எளிமையாகப் புரிய வைக்க ஆழ்வார்களை இறைவனே தோன்றச் செய்தான் என்பர் பெரியோர். இந்த 12 ஆழ்வார்களும் பகவானிடத்தில் ஆழ்ந்த பக்தியைக் கொண்டிருந்தவர்கள் என்பதால் தான். ஆழ்வார்கள் என்ற பெயர் ஏற்பட்டது.

1. பொய்கையாழ்வார் அவதரித்தவூர் காஞ்சியில் உள்ள திருவெஃகா நகரமாகும். இவர் பிறந்த திருநக்ஷத்ரம் ஐப்பசியில் திருவோணம். இவர் பொற்றாமரையில் ஒரு பூவில் பிறந்தமையால் அயோநிஜராகக் கொள்ளப்படுகிறார். இவர் பாடிய ப்ரபந்தம் முதல் திருவந்தாதியாகும்.

2. பூதத்தாழ்வார் அவதரித்தவூர் திருக்கடல்மல்லையாகும். தற்போது மஹாபலிபுரம் என வழங்கப்படுகிறது. இவர் பிறந்த திருநக்ஷத்ரம் ஐப்பசியில் அவிட்டம். இவர் ஒரு நீலோத்பல மலரில் பிறந்தமையால் இவரும் ஒரு அயோநிஜராவார். இவர் பாடிய ப்ரபந்தம் இரண்டாம் திருவந்தாதியாகும்.

3. பேயாழ்வார் அவதரித்தவூர் சென்னை மாநகரத்தில் உள்ள திருமயிலையாகும். இவர் பிறந்த திருநக்ஷத்ரம் ஐப்பசியில் சதயம். செங்கழுநீர் மலரில் பிறந்தமையால் இவரும் அயோநிஜரே. இவர் பாடிய ப்ரபந்தம் மூன்றாம் திருவந்தாதியாகும்.

வரிசையாக மூன்று நக்ஷத்ரங்களில் பிறந்த இம்மூவரும் முதலாழ்வார்கள் என அழைக்கப்படுகிறார்கள். நாலாயிரதிவ்யப்ரபந்தம் இவர்கள் மூலமாகவே எம்பெருமானால் தொடங்கப்பெற்றது.

4. திருமழிசையாழ்வார் அவதரித்தவூர் சென்னைக்கு அருகில் உள்ள திருமழிசையாகும். இவர் பிறந்த திருநக்ஷத்ரம் தையில் மகம். பார்கவ முநிகுமாரராகப் பிறந்தாலும் இவர் ஒரு பிரம்பறுப்பானால் வளர்க்கப்பெற்றவர். இவர் பாடிய ப்ரபந்தங்கள் பலவாயினும் இப்போது நமக்கு கிடைத்திருப்பது திருச்சந்தவிருத்தமும் நான்முகன் திருவந்தாதியும் மட்டுமே.

5. நம்மாழ்வார் அவதரித்தவூர் திருநெல்வேலியில் உள்ள ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூர் ஆகும். இவர் திருநக்ஷத்ரம் வைகாசியில் விசாகம். காரியாருக்கும் உடையநங்கையார்க்கும் பிறந்த இவருக்கு சடகோபன், காரி மாறன், பராங்குசன், வகுளாபரணன் என்பது போன்ற பல திருநாமங்களுண்டு. இவர் திருக்குறுங்குடி எம்பெருமானான நம்பியின் அம்சமாகவே கருதப்படுகிறவர். இவர் பாடிய ப்ரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி. இவை நான்கு வேதங்களகவே கொண்டாடாப்படுகின்றன. வேதம் தமிழ் செய்த மாறன் என்றே இவர் அழைக்கப்படுகின்றார்.

6. குலசேகராழ்வார் அவதரித்தவூர் கேரள தேசத்தில் உள்ள கொல்லிநகர் (திருவஞ்சிக்களம்). இவர் திருநக்ஷத்ரம் மாசியில் புனர்பூசம். இவர் சேர குல அரசராக, குலசேகரன் என்ற திருநாமத்துடன் பிறந்தவர். குலசேகரப் பெருமாள் என்றும் இவரை அழைப்பர். இவருடைய ப்ரபந்தம் பெருமாள் திருமொழி என்று கூறப்படுகிறது.

7. பெரியாழ்வார் அவதரித்தவூர் திருவில்லிபுத்தூர் என்னும் ஸ்ரீவில்லிபுத்தூராகும். இவர் திருநக்ஷத்ரம் ஆனியில் ஸ்வாதி. விஷ்ணுசித்தர் என்பது இவருடைய இயற்பெயர். எம்பெருமான் மீது கொண்ட பரிவினால் இவர்க்கு பெரியாழ்வார் என்ற திருநாமம் அமைந்தது என்பர் மணவாள மாமுனிகள். வேதாந்த தேசிகனார் தம்முடைய கோதா ஸ்துதியில், தம் மகளான ஆண்டாளை எம்பெருமானுக்கு மணமுடித்து வைத்தமையால் இவர்க்கு பெரியாழ்வார் என்ற திருநாமம் அமைந்தது என்று பணித்துள்ளார். இவர் தாய் தந்தையர் பத்மா முகுந்த பட்டர் ஆவர்கள். இவருடைய ப்ரபந்தங்கள் திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழியாவன.

8. தொண்டரடிப்பொடியாழ்வார் திருமண்டங்குடி என்ற ஊரில் அவதரித்தவர். இவர் திருநக்ஷத்ரம் மார்கழியில் கேட்டை. விப்ரநாராயணர் என்ற பெயருடன் பூர்வசிகை ப்ராஹ்மண குலத்தில் பிறந்தவர். இவருடைய பாசுரங்கள் திருவரங்கப் பெருமானைப் பற்றி மட்டுமே அமைந்தன. திருவேங்கடமுடையானைப் பாடாத ஆழ்வார் இவர் ஒருவரே. இவருடைய ப்ரபந்தங்கள் திருமாலையும் திருப்பள்ளியெழுச்சியாமாவன.

9. திருப்பாணாழ்வார் திருவரங்கத்தருகே அமைந்த உறையூர் என்னும் நிசுளாபுரி அல்லது திருக்கோழி என்னும் ஊரில் அவதரித்தவர். இவர் திருநக்ஷத்ரம் கார்த்திகையில் ரோஹிணி. இவர் பாணர் குலத்தவர். இவருடைய ப்ரபந்தம் அமலனாதிபிரான் எனப்படும். லோகசாரங்கமுனிவர் மீது அமர்ந்து அரங்கம் வந்தமையால் இவருக்கு முநிவாஹனர் என்ற காரணப்பெயரும் உண்டு.

10. திருமங்கையாழ்வார் திருக்குறையலூரில் அவதரித்தவர். இவர் திருநக்ஷத்ரம் கார்த்திகையில் கார்த்திகை. இவர்க்கு நீலன், பரகாலன், திருமங்கை மன்னன் என்பது போன்ற பல பெயர்களும் உண்டு. இவர் கள்ளர் குலத்தவர். நான்கு வகையான கவிகளையும் (ஆசு கவி, சித்ரகவி, விஸ்தார கவி, மதுரகவி) பாட வல்லவராதலால் இவர்க்கு “நாலு கவிப்பெருமாள்” என்ற பெயரும் உண்டு. இவருடைய ப்ரபந்தங்கள் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல் ஆவன. இவை வேதங்களின் ஆறங்கம் போன்றன என்பது பூர்வர்கள் வாக்கு.

11. மதுரகவியாழ்வார் திருக்கோளூரில் அவதரித்தவர். இவர் திருநக்ஷத்ரம் சித்திரையில் சித்திரை. தம் ஆசார்யனான நம்மாழ்வாரையே தமக்கு எல்லாமாகக் கொண்ட இவர் அவ்வாழ்வார் மீது கண்ணிநுண்சிறுத்தாம்பு என்ற ஒரு சிறு ப்ரபந்தத்தை மட்டும் இயற்றியவர்.

12. ஆண்டாள் என்னும் கோதை ஸ்ரீவில்லிபுத்தூரிலே திருவாடிபூரத்தில் அவதரித்தவர். இவர் பெரியாழ்வார் நந்தவனத்திலே துளஸியிலே கண்டெடுக்கப்பட்டவர். இவர்க்கு கோதை, ஆண்டாள், சூடிக்கொடுத்த நாச்சியார் என்பது போன்ற பல பெயர்கள் உள்ளன. ஆழ்வார்களிலே பெண்ணாய்ப் பிறந்தவர் இவர் ஒருவரே. இவர் இளம் பிராயத்தில் வழங்கிய திருப்பாவை உலகப்புகழ் பெற்றது. இவருடைய மற்றொரு ப்ரபந்தம் நாச்சியார் திருமொழி எனப்படும்.

Advertisement