Home ஆன்மிகம் ஜோதிர் லிங்க தலம் – குஸ்ருணேஸ்வரர் ஆலயம்

ஜோதிர் லிங்க தலம் – குஸ்ருணேஸ்வரர் ஆலயம்

497
0

சிவபெருமான் ருத்ர தாண்டவம் தாண்டும்போது விழுந்த ஒளிப்பிழம்புகளே ஜோதிர்லிங்கங்களாக அறியப்படுகிறது ,அவை 12 இடங்களில் விழுந்தது அவைகளே ஜோதிர்லிங்கங்க தலமாக விளங்குகிறது .இத்தலங்களை வணங்கினால் நம் வாழ்வில் இருளை போக்கி ஆரோக்கியம், செல்வ செழிப்போடு வாழலாம் .அந்த 12 ஜோதிர்லிங்கத் தலத்தில் ஒன்றுதான் குஸ்ருணேஸ்வரர் ஆலயம்.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்க பாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், எல்லோரா குகையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் குஸ்ருணேஸ்வரம் உள்ளது. இங்குதான் குஸ்ருணேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறைவனை, அம்பாள் குங்குமப்பூவால் வழிபட்ட தலம் இதுவாகும். அதனால் தான் இந்தத் தலத்திற்கு குஸ்ருணேஸ்வரம் என்று பெயர். குஸ்ருணம் என்றால் குங்குமம் என்று பொருள்.

தல வரலாறு: முன்னொரு காலத்தில் இத்தலம் ஒரு சிறுகிராமமாக இருந்தது. அக்கிராமத்தில் சுதர்மன் என்ற பிராமணன் வாழ்ந்து வந்தார். அவரது மனைவியின் பெயர் சுதேஹா என்பதாகும். இருவரும் இனிதே இல்லறம் நடத்திவந்தனர். நீண்ட நாட்களாக அவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லாமையினால் சுதேஹா மிகவும் மனம் வருந்தினாள். எனவே தனது வருத்தம் நீங்கத் தன் தங்கை கிருஷ்ணை என்பவளைத் தனது கணவனுக்கு இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்து வைத்தாள். கிருஷ்ணை மிகுந்த சிவபக்தி கொண்டவள்.

தினமும் 108 சிவலிங்கங்களைக் களிமண்ணால் செய்து சிவவழிபாடு செய்து, அந்த சிவலிங்கங்களைச் சிவாலய ஏரியில் போட்டு விடுவாள். சிவ பெருமான் அருளால் கிருஷ்ணைக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. யாவரும் மகிழ்ந்து அக்குழந்தையை அன்புடன் கவனமாக வளர்த்து வந்தனர். அதுவரை சலனமின்றி இருந்த சுதேஹைக்கு இப்போது பொறாமையும், தனக்கு மதிப்புக் குறைந்துவிட்டது என்ற தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு விட்டது. அதனால் பெரிதும் மனம் புழுங்கினாள். இவ்வளவுக்கும் காரணம் கிருஷ்ணையின் மகன்தான் என எண்ணி, அம்மகன் தூங்கும் போது கொன்று, உடலைச் சாக்கில் கட்டி சிவாலய ஏரியில் போட்டு விட்டாள். இதை அறிந்த கிருஷ்ணை கலங்காமல் சிவபெருமான் தன் மகனைக் காப்பாற்றுவார் எனத்திடமான நம்பிக்கைகொண்டு, அன்றும் 108 சிவலிங்கங்கள் செய்து சிவலிங்கப்பூசையில் ஈடுபட்டாள்.

சிவ பெருமானிடம் அழுதுமுறையிட்டு தன் மகனைக் காக்க வேண்டினாள். வழக்கம் போல் லிங்கங்களைக் சிவாலய ஏரியிலிட்டாள். என்ன ஆச்சரியம்! அவளது மகன் மிகவும் பிரகாசமான ஒளியுடன் ஏரியின் நீரிலிருந்து எழுந்து வந்தான். சிவபெருமான் கிருஷ்ணைக்குக் காட்சி தந்து ஆசீர்வதித்தார். கிருஷ்ணையின் வேண்டுதலின்படி சிவபெருமான் இங்கேயே கோயில் கொண்டு மக்களைக் காப்பதாக வரமளித்தார். அதன்படியே இங்கே சிவன் கோயில் உண்டாகியது. அக்கோயிலுக்கு கிருஷ்ணேசுவரம் என்னும், சிவலிங்கத்திற்குக் கிருஷ்ணேசுவரர் என்றும் பெயர் வழங்கலாயிற்று.

அழகிய சிற்ப வேலைப் பாடுகள் கொண்ட ஐந்து அடுக்கு கோபுரத்தினைக் கொண்டதாக கோவில் காணப்படுகின்றது. சிவப்பு நிறமான கல் மலையில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகாமையில் புகழ் மிக்க எல்லோரா குகைகள் அமைந்து உள்ளன.

Advertisement