Home ஆன்மிகம் மஹாளயபட்சம் – ஜோதிட ரகசியம். புரட்டாசி மாத பித்ரு வழிபாட்டின் முக்கியத்துவம்

மஹாளயபட்சம் – ஜோதிட ரகசியம். புரட்டாசி மாத பித்ரு வழிபாட்டின் முக்கியத்துவம்

417
0

புரட்டாசி மாதம் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்வது என்பது ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமைகளில் ஒன்று. மஹாளய அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை காலத்தைப் பித்ரு பட்சம் என்று அழைக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னிராசியில் சஞ்சாரிக்கிறார். கன்னி ராசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. நம்மையும் சேர்த்து, சூரிய மண்டலம், நமது பக்கத்தில் இருக்கும் சில நட்சத்திரக் கூட்டங்களுடன் ஒரு மையத்தைச் சுற்றி வருகிறது. அந்த மையத்தைப் போல பல சிறு(அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள்;ஒரு ஒளி ஆண்டு என்பது ஒன்பது லட்சம் கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தைக் கொண்டது. இந்த  மையங்கள் ஒருங்கிணைந்து கன்னிராசியை மையமாகக் கொண்டுதான்  சுற்றி வருகின்றன.

பொதுவாகவே மையம் என்பது ஒரு முக்கிய  ஆதாரமாக செயல்படுகிறது. பூமிக்கு மையம் சூரியன். அதுவே பூமிக்கு ஆதாரம்.  மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால்,உடலை விட்டு பிரிந்த உயிர்,இந்த கன்னிராசி இருக்கும் மண்டலத்தில் ஒடுங்குகிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். எனவேதான் , கன்னிராசி இருக்கும் மண்டலத்தைப் பித்ருயானம்(பித்ருக்களின் வழி)என்பார்கள். இந்த கன்னிராசி தென் திசையில் இருக்கிறது. எனவேதான் அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்தத் திசையில் சூரியன் சஞ்சாரிக்கும்போது விசேஷமாகவே பித்ரு காரியம் செய்கிறோம். இறந்தவர்களது திதியன்று சிரார்த்தம் செய்கிறோம். அது அந்த ஒரு திதியில் மட்டுமே செய்யப்படுகிறது. அப்படி இருக்க இந்த பித்ரு பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட தேய்பிறை காலம் முழுவதும் செய்யப்படுவது ஏன்? இதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்,நாம் பித்ருக்களின் காலக்கணக்கைப் பார்க்க வேண்டும்.

சூரியனது சுழற்சியை வைத்து சூரிய வருடம் என்று இருப்பது போல,சந்திரனது சுழற்சியை வைத்து சந்திரவருடம்(சந்திரமானம்) என்பது உண்டு. அதேபோல், பித்ருக்களின் பித்ருவருடம் என்று இருக்கிறது. இது சந்திரனை வைத்து உருவாகும் திதியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதன் விளக்கம்:

ஒரு பட்சம் = 15 நாட்கள்(வளர்பிறை அல்லது தேய்பிறை)

2 பட்சம் = ஒரு பித்ரு நாள்(நமக்கு ஒரு சந்திர மாதம்)

30 பித்ரு நாள்(60 பட்சம்)=ஒரு பித்ரு மாதம்

12 பித்ரு மாதம்(720 பட்சம்)=ஒரு பித்ரு வருடம். இதை திதியாக மாற்றினால், ஒரு பித்ரு வருடம் =(720 பட்சம்,15 திதி)=10,800 திதி. ஒரு சந்திர வருடத்தில் 360 திதிகள் இருக்கவே, 10,800 திதி/360 திதி =30 வருடம்.

அதாவது நம்முடைய சந்திர வருடக்கணக்கில் 30 வருடம் என்பது பித்ருக்களின் ஒரு வருடம் என்பதாகும். ஒருவன் 30 வருடங்களுக்கு தனது பித்ருக்களாகிய முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்தால், பித்ருக்களின் வாழ்நாளில் ஒரு வருடத்துக்கு மட்டுமே அந்த சிரார்த்தம் கிடைத்தது என்று ஆகும். அவ்வளவு காலமாக ஒருவர் சிரார்த்தம் செய்வது மிக மிக மிக அபூர்வம். அதனால், பித்ரு உலகமான கன்னிராசி இருக்கும் மண்டலத்துடன் சூரியன் இணையும் புரட்டாசி மாதத்தில் ஒரு முழு பட்சத்தையும்(15 நாட்கள்) பித்ருக்களுக்கு வழிபாடு செய்வதற்காக ஒதுக்கியுள்ளனர் நமது முன்னோர்கள்.

தேய்பிறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால், அதுதான் பித்ருக்களின் பகல்காலம் ஆகும். அவர்கள் விழித்திருக்கும் அந்தக் காலகட்டத்தில் புரட்டாசி மாத பித்ரு பட்சத்தில் அவர்கள் உலகை நோக்கி நாம் அவர்களை வழிபடுகிறோம். இந்த பட்சத்தில் நாம் செய்யும் வழிபாடு,சிரார்த்தம் செய்யப்படாத அனைத்து பித்ருக்களையும் சென்றடைகிறது. இவ்வாறு அனைத்து ஜீவன்களையும் அரவணைக்கும் விதமாக நம் இந்து முன்னோர்களால் நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இதனால்தான் ஒருவன் புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால்,12 ஆண்டுகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியத்தை அடைகிறான் என நமது இந்து மதம் சொல்கிறது. முறையாகவும், சிரத்தையாகவும்,அக்கறையுடனும், எவனொருவன் பித்ரூ  கடமைகளை சரியாக செய்வானோ அவனுக்கும் அவன் தலை முறைக்கும் முன்னோர்களின் பரிபூரண ஆசியை பெறுவார்கள் என்பது சத்தியம்.

Advertisement