Home ஆன்மிகம் ராமாயண கதாநாயகி சீதைக்காக கட்டப்பட்ட ஒரே கோயில் இதுதான் – சீதை சிறைவைக்கப்பட்ட அசோக வனத்தில்...

ராமாயண கதாநாயகி சீதைக்காக கட்டப்பட்ட ஒரே கோயில் இதுதான் – சீதை சிறைவைக்கப்பட்ட அசோக வனத்தில் கட்டப்பட்ட ஆலயம்

759
0

இராமாயண கதையின் நாயகி, சீதையை இராவணன் கவர்ந்து சிறை வைத்திருந்த இடம் அசோக வனம் என்று குறிப்பிடபட்டுள்ளது. அந்த அசோக வனம் இலங்கையில் உள்ள  நுவரேலியா நகரிலிருந்து பண்டாரவளை செல்லும் வீதியில் சீத்தா எலிய பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் நுவரேலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயம் என்று பெயர் பெற்றுள்ளது.

புராண காலத்தில் அசோக வனம் என்று குறிப்பிடப்படும் இந்தப் பகுதி, தற்போது இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா அருகில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியாவில், சீதா எலியாவில் அமைந்துள்ள சீதை அம்மன் கோயிலில் சீதா பிராட்டி மூலவராக அமர்ந்துள்ளார். அதாவது உலகிலேயே சீதையை பிரதானமாக வைத்து கட்டப்பட்ட கோயில் இது மட்டும் தான் உள்ளது. இத்தலம் குழந்தைப்பேறு, தம்பதியர் ஒற்றுமைக்கு ஏற்றத் தலமாகத் திகழ்வதால், உள்நாட்டவர் பலரும் தவறாமல் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்த பகுதியில் காணப்படும் பல வட்டமான தடங்கள், இராவணனின் யானையின் கால்தடம் என கூறப்படுகிறது. சீதா தேவியைப் பார்க்க யானையில் இராவணன் வந்ததாக தெரிகிறது.

சீதா எலியா ஆலயத்தின் எதிரே பிரமாண்ட மலை அமைந்துள்ளது. அதன் உச்சியில் ராவணன் கோட்டையும், அரண்மனையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மலையின் முன்பகுதியைப் பார்த்தால் அது அனுமனின் முகம் போல் காட்சி தருவது வியப்பாக உள்ளது.

கோயிலின் உள்ளே இரண்டு கருவறை விமானங்கள் உள்ளன. ஒன்றில் பழைய மூல மூர்த்திகளும், மற்றொன்றில் புதிய மூல மூர்த்திகளும் உள்ளன. எதிரில் அனுமன், ராமபிரானை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றார். இரண்டு கருவறைகளிலும் ராமபிரான், சீதை, லட்சுமணன் அருள்காட்சி வழங்குகின்றனர். ஆலயத்தின் தலமரமாக அசோக மரம் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை வைத்து ஒரு துணியில் காசுகளை வைத்து இந்த மரத்தில் கட்டி வணங்கி செல்கின்றனர். இப்படி செய்வதால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறுவதாக கூறுகின்றனர்.

ஆலயத்தின் பின்புறம் சீதை ஆறு ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மறுகரையில் அனுமன் பாதங்களின் சுவடுகள் பாறையில் அமைந்துள்ளன. அதன் மேலே சிறிய மேடை அமைந்து, அதில் ராமபிரான் கொடுத்த கணையாழியை அனுமன் சீதையிடம் தரும் காட்சி, சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்புறம் மலைகள் நிறைந்திருக்க, அதில் அசோக மரங்கள் நிறைந்துள்ளன.

ஆலயத்தை ஒட்டிய ஒரு பகுதி மண்ணின் நிறம் கருமை நிறமாகவும், மறுபகுதி இயல்பான நிறத்திலும் அமைந்துள்ளது. இதற்குக் காரணம், இலங்கையை அனுமன் எரித்ததால் ஏற்பட்டது என்ற ஐதீகம் கூறப்படுகிறது. ராமாயணம் தொடர்புடைய பழம்பெரும் தலங்களான ஹக்கலா, மலிகடென்னா, ராமராசாலா, சீத்தாவாகா, கெலனியா இன்றும் காணப்படுகிறது. இதேபோல, ராவணன் குகை, ராவண எல்லா எனும் இடங்கள் இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளன. ராவணனின் மற்றொரு கோட்டை தென்கிழக்கு கடற்கரைக் கோவிலாக இருக்கிறது.

Advertisement