Home தமிழ்நாடு மதவெறியைக் கிளப்பும் விசமிகள், விடுதலை செய்வதா?- சிறுபான்மையினர் நலக் குழு அதிருப்தி

மதவெறியைக் கிளப்பும் விசமிகள், விடுதலை செய்வதா?- சிறுபான்மையினர் நலக் குழு அதிருப்தி

353
0

இசுலாமியர்கள் மீது மதவெறியுடன் விளம்பர விற்பனை செய்திருந்த சென்னை பேக்கரி உரிமையாளருக்கு எதிராக எதிர்ப்பு வலுத்ததால், போலீசு கைதுசெய்தது; ஆனால் அவரை விடுதலை செய்துவிட்டது. மாநிலத்தில் பல இடங்களிலும் இந்தக் கொள்ளைநோய்க் காலத்திலும் மதவெறியர்களின் விசமத்தனம் அதிகரித்துவரும் நிலையில், குற்றவாளியை விடுதலைசெய்தது கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநில பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

“ உலகமே கொரானா வைரஸ் தாக்குதலில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. அரசுகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் என அனைவரும் கோவிட்-19 நோய்க்கு எதிராக போராடி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டும், ஒரு பகுதி மக்களை வெளியேற்றி கொண்டும் வருகின்றனர். இந்த தீய சக்திகள் மீது தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

சென்னை தியாகராயர் நகரில் செயல்பட்டு வரும் ஜெயின் ஃபேக்ரீஸ் & கன்ஃபெகஷனரீஸ் தனது நிறுவனத்தில் முஸ்லீம்கள் பணி வைக்கப்படவில்லை என விளம்பரம் செய்துள்ளது. அதேபோல இந்து தமிழர் கழகம் என்ற அமைப்பு “துலுக்கனை வெட்ட வேண்டும் என்றால் எத்தனை பேர் ஆயுதம் எடுப்பீர்கள்” என முகநூலில் கருத்து பகிர்ந்து வெறியை கிளப்பிவிட்டு வருகின்றது.


இரமலான் நோன்பு காலத்தில் வெள்ளிக்கிழமை கூட மசூதிக்குச் செல்வதை தவிர்த்து முஸ்லீம்கள் வீட்டிலேயே நமாஸ் செய்து வருகின்றனர். மசூதிகளில் நோன்பு கஞ்சி தயார் செய்து வழங்குவதும் இல்லை, ரமலான் கால ஈகை செய்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட போது கூட கொரானா நோயின் தீவிரத்தை உணர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

சிறுபான்மை மக்கள் உள்பட்ட அனைவரும் மத வழிபாட்டு கூடங்களில் கூறுவதை தவிர்த்து தான் வருகின்றனர். ஏன், மதுரை கள்ளழகர் விழாவும், திருவண்ணாமலை கிரிவலம் உள்ளிட்ட இந்து கோயில்களிலும் கூட பெயரளவிலேயே விழாக்கள் நடந்து வருகிறது. அரசு மற்றும் அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் இதுபோன்ற முன்னெடுப்புகளை சிதைக்கும் வகையில் மதவெறி சக்திகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

இன்நிலையில் சென்னையில் பேக்கரி அதிபரை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால் சம்மந்தபட்ட குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளது காவல்துறை நடவடிக்கை கண்துடைப்பாக அமைந்துள்ளது என எண்ண தோன்றுகிறது. எனவே உரிய சட்டத்தின் அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசும், காவல்துறையும் இது போன்ற சக்திகளை தொடர்ந்து அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கேட்டுக்கொள்கிறது. தமிழக மக்கள் இந்த இந்துத்துவ மதவெறி சக்திகளின் தீய நோக்கங்களை உணர்ந்து அவர்களிடம் இருந்து விலகி இருக்கவும், இத் தீயசக்திகளுக்கு எதிராக எப்போதும்போல ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.” என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement