Home ஆன்மிகம் பஞ்ச பாண்டவர்கள் பூஜித்த தலம் – அமாவாசை தோறும் நடக்கும் மிளகாய் வற்றல் யாகம்

பஞ்ச பாண்டவர்கள் பூஜித்த தலம் – அமாவாசை தோறும் நடக்கும் மிளகாய் வற்றல் யாகம்

821
0

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே உள்ள அய்யாவாடியில் பிரத்தியங்கிராதேவிக்கு தனிக் கோயில் உள்ளது. பிரத்யங்கிராதேவி சரபேசுவரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவள். சிம்ம முகம், 18 கரம், சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறாள். கரிய நிறத்துடன் தலையில் சந்திரகலை அணிந்து சூலம், பாசம், டமருகத்துடன் இருபுறமும் லட்சுமி, சரசுவதி தேவியுடன் அட்டகாசமாக வீற்றிருக்கிறாள். 18 சித்தர்கள் பூஜித்த தலம் அகத்தியருக்கு அம்பிகை காட்சி தந்த தலம். ஸ்ரீராமர் லட்சுமணர் ஆகியோர் பூஜித்த தலம். இராவணன் மகன் மேகநாதன் இந்திரஜித் நிகும்பல யாகம் செய்ய வேண்டி வந்த தலம்.

கோயில் விமானம் வடமாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. பிரத்யங்கிரா தேவி தனி சன்னதி கொண்டு வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. சம்பந்தர் இத்தல சிவனை குறித்து பாடியுள்ளார். மூலவராக அகத்தீசுவரர் கிழக்கு நோக்கி உள்ளார். அம்மன் தர்மசம்வர்த்தினி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். தலவிருட்சம் ஆலமரம். இதில் ஆல், அரசு, புரசு, இச்சி, மா இலைகள் இருப்பது விசேடம்.

மிளகாய் வத்தல் யாகம் (நிகும்பலா யாகம்): இங்கு அமாவாசை தோறும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை நிகும்பலா யாகம் நடக்கிறது. மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் கொட்டுவார்கள். சாதாரணமாக ஒரு மிளகாய் வத்தலை தீயில் போட்டாலே நெடி இருக்கும். ஆனால், நிகும்பலா யாகத்தில் மூடை மூடையாக போடப்படும் மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட இருக்காது. கலியுகத்தில் இது மாபெரும் அதிசயம். மேலும் 108 வகை ஹோம சாமான்கள் குண்டத்தில் இடப்படும். பட்டு புடவை, பழ வகைகளும் இதில் அடக்கம். யாகம் முடிந்ததும், புனித கலசநீரால் சரபேசுவரருக்கும், பிரத்யங்கிரா தேவிக்கும் அபிசேகம் நடத்தப்படுகிறது. சனிபகவானின் மகன் குளிகன் இங்கு வழிபாடு செய்துள்ளதால் சோதிட ரீதியாக சனி தோசம் உள்ளவர்களும் யாகத்தில் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் நடக்கும் இந்த யாகத்தில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டால்: இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்; எதிரிகளின் தொல்லை விலகும்; கடன் தொல்லை தீரும்; உத்தியோக உயர்வு கிடைக்கும்; புதிய வேலை வாய்ப்பு உருவாகும்; திருமணம் விரைவில் நடக்கும்; வியாபாரம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு : பஞ்சபாண்டவர்கள் தேசத்தை இழந்து, அவமானத்தை சந்தித்து, துக்கமும்  வேதனையும் பொங்க, இங்கே சுற்றித் திரிந்தனர் ஐவரும்.  சுடுகாடுகளுக்கு நடுவே இருக்கும் ஒரு பகுதியைத் தேடி அலைந்தனர்.  இந்த ஐவரும் சகோதரர்கள்.  விலங்குகள் ஏதும் தாக்கி இறந்துவிடுவோமோ, தேசத்தை மீட்க முடியாமல் போய்விடுமோ என்று பயத்தில் திரிந்தனர்.   எதிரிகளால் தொல்லை நேருமோ என்று பதுங்கி வாழ்ந்தனர். நல்ல உணவும் உறங்குவதற்கு  சரியான இடமும் இல்லாததால் நோய் வந்துவிடுமோ என்று கவலைப் பட்டனர்.  செல்வச்  செழிப்புடன் தான-தருமங்களைச் செய்தபடி இருந்த நிலை மாறி, தரித்திரம் பிடித்து வாட்டுகிறதே.  என்று கிடைக்கும் உணவை சாப்பிட்டு பொழுதைக் கழித்தனர்.

பிரத்தியங்கராதேவியை வழிபடுங்கள்; உங்களின் அத்தனை பயத்தையும் போக்குவாள்; பலம் கூட்டுவாள்; வெற்றியைத்  தருவாள். அவளை பூஜித்து அவளின் அருளைப் பெறுங்கள் என்று அந்த சகோதரர்கள் ஐவருக்கும் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. ஒரு நாள், இவர்கள் தேடி வந்த இடமும் கிடைத்தது. அங்கே  சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தந்தாள் பிரத்தியங்கராதேவி.  இதைக் கண்டு பூரித்தவர்கள் தேவியை அர்ச்சித்து வழிபட பூக்களைத் தேடினர்.  அது சித்திரை மாதம் என்பதால், எங்கே தேடியும் பூக்கள் கிடைக்கவில்லை.  நொந்து போனார்கள்.  “இதென்ன சோதனை? தேவியை வணங்க, பூக்கள் கூட கிடைக்கவில்லையே” என்று வருந்தினர்.  அந்த நேரம், எதிரே ஓங்கி உயர்ந்து நிற்கும் ஆலமரத்தைக் கண்டனர்.  இந்த மரத்தின் இலையையே பூக்களாக பாவித்து, பிரத்யங்கிரா தேவியை தியானித்து ஆலம் இலைகளையே எடுத்து அர்ச்சித்தனர்.  அந்த இலை, ஐந்து ஐந்து இலைகளாக தேவியின் திருப்பாதங்களில் விழுந்தன.  இப்படி நெடுநாட்களாக பூஜை செய்த  பலனாக, பகைவர்களை வென்றனர்; தேசத்தை மீட்டனர்; இழந்த அதிகாரத்தைப் பெற்றனர்.   தேசமே பூரித்துப் போனது.

இந்த ஐந்து பேரும் பஞ்ச பாண்டவர்கள்.  ஐவர் வந்து பூஜித்ததால், இந்தத் தலத்துக்கு ஐவர்பாடி என்ற பெயர் ஏற்பட்டது.   இப்போது அய்யாவாடி என்று அழைக்கப்படுகிறது.  இங்கே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி, தன்னை  வணங்குவோரது அனைத்து பயங்களையும் போக்கி அருள் புரிந்து வருகிறாள் பிரத்யங்கிராதேவி. கும்பகோணம் திருநாகேஸ்வரத்துக்கு அருகில் உள்ள அய்யவாடியில் குடிகொண்டிருக்கும் தேவியின் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றைக்கும் சுடுகாடுகள் இருக்கின்றன.

Advertisement