Home அரசியல் காட்மேன் வெப் சீரிஸ்க்கு ஆதரவாக களம் இறங்கும் திருமாவளவன்… வெளிச்சம் டி.வி.யில் போடப் போறாரோ..?

காட்மேன் வெப் சீரிஸ்க்கு ஆதரவாக களம் இறங்கும் திருமாவளவன்… வெளிச்சம் டி.வி.யில் போடப் போறாரோ..?

351
0

இன்று இணைய வழியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காட்மேன் வெப்சீரிஸ்க்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை ஜீ குழுமம் கை கழுவிய நிலையில், வெளிச்சம் தொலைக்காட்சியில் போடுவதற்கு தயாராகிறார் என்றே தெரிகிறது.

இந்த நிலையில் மேலும் அவர்கள் நிறைவேற்றிய முக்கிய தீர்மானங்கள் இங்கே. பிற மாநிலங்களில் வேலைக்குப்போய் அல்லல்பட்டுத் திரும்பியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக ரூபாய் 10,000 அளிக்க வேண்டுமெனத் தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனைக்கு நிரந்தரமாகத் தீர்வு காண, தேசிய அளவில் பாதுகாப்பான சட்டம் ஒன்றை உடனடியாக இயற்ற வேண்டும்.

‘காட்மேன்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப்பற்றி அவதூறு செய்திருப்பதாகப் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லி அதை ஒளிபரப்பவிடாமல் தடை செய்தும்; அதன் தயாரிப்பாளர் ,இயக்குனர் ஆகியோருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டும் சனாதனப் பயங்கரவாதக் கும்பல் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய போக்கை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. கருத்துச் சுதந்திரம் குறித்து உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் அந்தத் தொடரை வெளியிடுவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும், தயாரிப்பாளர் இயக்குனர் உள்ளிட்டவர்களுக்குக் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

கோவையில் வழிபாட்டுத் தலத்தில் பன்றி மாமிசத்தை வீசி மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சித்த சனாதனப் பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்த நபரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறைப்படுத்த வேண்டுமெனவும் அவர் சார்ந்திருக்கும் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்யவேண்டுமெனவும் தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மருத்துவ படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவல் கட்டத்தை அடைந்து விட்ட நிலையில் சென்னையில் மட்டும் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். சென்னையில் நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு சிறப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். சென்னையை முழுமையாகத் தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவித்து நூறு விழுக்காடு அனைவரையும் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது என மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Advertisement