*திருவெறும்பூர் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது - தவெக கட்சி வேட்பாளராக நவல்பட்டு விஜி தேர்தலில் போட்டி*

Mar 19, 2026 - 07:09
Mar 19, 2026 - 07:11
 515
*திருவெறும்பூர் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது - தவெக கட்சி வேட்பாளராக நவல்பட்டு விஜி தேர்தலில் போட்டி*

நான் தேர்தலில் வெற்றி பெறவே அரசியலுக்கு வந்துள்ளேன். யாரையும் விமர்சிக்க வரவில்லை. -திருவெறும்பூர் தொகுதி தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜி பேட்டி

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் யார் வேட்பாளர் என்ற அறிவிப்பு வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனித்து போட்டி இடுவது என்ற முடிவில் 234 தொகுதியிலும் வேட்பாளரை தேர்ந்தெடுத்து வருகிறார். இந்நிலையில் நட்சத்திர அந்தஸ்துமிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற உறுப்பினராக உள்ள திருவெறும்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட முன்னாள் திமுகவின் ஒன்றிய செயலாளரும், தொழிலதிபருமான நவல்பட்டு விஜய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருவெறும்பூரில் உள்ள நவல்பட்டு விஜியின் அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜிக்கு நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட என்னை நியமித்துள்ளார். தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சி , தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல்வர் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டு அஞ்சிய சில அரசியல் கட்சியினர் அவருக்கு பல்வேறு இடைஞ்சல்களை கொடுத்து வந்தாலும் எதையும் எதிர்கொள்ள தயார் என்று செயல்பட்டு வருகிறார். தமிழக மக்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தலைவர் விஜயின் முகத்திற்காக வாக்களிப்பார்கள். மற்ற கட்சியினர் காசு கொடுத்து ஜெயித்து ஓட்டு வாங்கி ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள் அது நடக்காது. 40 ஆண்டு காலம் திமுகவில் உழைத்தேன். ஆனால் எனக்கு எந்தவித அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எனக்கு திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார். 40 ஆண்டு காலமாக திமுகவில் பயணித்து அதிலிருந்து வெளியேறியது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. தவெகவின் தொண்டர்கள் நிர்வாகிகள் எனக்கு அளித்த உற்சாகமும் ஆரவாரமும் அந்த மன வேதனையை மறக்கடிக்க செய்தது. இன்றைக்கு வீடு வீடாக சென்று வாக்கு சர்வே எடுத்து பார்த்தால் 100% தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாய்ப்பு இருப்பது தெரியும். நான் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே வந்துள்ளேன். மற்றவர்களை விமர்சனம் செய்ய வரவில்லை. ஊழல் இல்லாத ஆட்சி நடத்துவதே தவெக தலைவர் விஜய்யின் நோக்கம். அதற்காக நாங்கள் பாடுபடுவோம். மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற மக்களோடு சேர்ந்து போராடுவேன். இதுவரை அரசியலில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, இந்த முறை கிடைத்துள்ளது. நிச்சயம் வெற்றி பெற்றால் வெற்று வாக்குறுதிகள் அளிக்காமல் , ஒரு திட்டத்தை 100% செயல்படுத்த பாடுபடுவேன். அரசும், அதிகாரிகளும், ஒரு திட்டத்திற்கான ஒப்பந்த வேலையில் 50 சதவீதம் கமிஷன் பெறுவதால், எந்த வேலையும் தரமில்லாமல் உள்ளது. தவெகவின் ஊழலற்ற ஆட்சியால் 100% தரமான ஒப்பந்த வேலை செய்யப்படும். 200 கோடி ரூபாய் சம்பளம் பெறும். உச்ச நடிகராக இருந்தவர் விஜய். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியலுக்கு வந்துள்ளார். அவருடைய ஆட்சி எம்ஜிஆர் ஆட்சியை விட சிறப்பாக இருக்கும். சில கட்சியினர் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். தற்போது மக்களிடையே நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சராவது உறுதி . இதில் என்ற மாற்றுக்கருத்தும் கிடையாது. இதை யாராலும் மாற்றவும் முடியாது என்றார்.

What's Your Reaction?

Like Like 6
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Angry Angry 1
Sad Sad 2
Wow Wow 1